திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் 
புன்மை யிருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் 
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே 
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே




மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ 
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ 
குதலை மொழிக்கிரங்காதொரு தாயோ 
கோ மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி 
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய் 
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய் 
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே